மூக்கறுப்புப் போர் -2

மனித ஜாதியில் ஆணோ, பெண்ணோ முக அழகு மூக்காலேதான். அழகி கிளியோபாட்ராவின் மூக்கழகு சரித்திர பிரசித்தி. அவளுடைய மூக்கழகுக்கு முதலில் மயங்கியவன் சீசர். அடுத்து அந்தோனி. யோசித்துப் பார்த்தால் மூக்கறுத்த கதைதான் இராமாயணம். ஆண்களில் கும்பகர்ணன் மூக்கிழந்தான். பெண்களில் சூர்ப்பனகை . இவர்கள் நிசமாகவே மூக்கிழந்தவர்கள். சீதையைத் தூக்கிக்கொண்டுபோக வந்தாள் சூர்ப்பனகை. பெண் கொலை கூடாது என்பதால் இவளைக் தண்டித்து விரட்ட நினைத்தான் இலக்குவன். பெண்ணுக்கு அழகு தரும் உறுப்புக்களை அறுத்தெரிந்தான். முதலில் அறுபட்டது இவளுடைய மூக்கு.போனால் வராதவை உயிரும் மானமும். ஆகவே கொல்வதற்குப் பதிலாக ஒருவனை அவமானப்படுத்தி அனுப்புவது ஒருவகை அரச தண்டனை தமிழர் மூக்கைக் கன்னட் நாட்டினர் அறுத்தனர் மதுரையில்.திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் .இச் செய்தி இங்கு விவரிக்கப்படுகிறது

1658ம் ஆண்டு மைசூர் மன்னர் முதலாம் கண்டீர நரசன் இதே தண்டனை முறையை மிகக்கொடூரமாக நடத்தினான் அதன் பலனை அவனே பின்னர் அனுபவித்தான்.

இவ்வரசனுக்கும் திருமலை நாயக்கருக்கும் விரோதம். திருமலை நாயக்கர் நோய் வாய்ப்பட்டு த படுக்கையில் இருந்த சமய்ம். கன்னட கண்டீர நரசன் உத்திரவுப்படி சேனாதிபதி தளவாய் ஹம்பய்யா மதுரைமீது படையெடுத்தான். கன்னட வீரர்கள் கையில் ஒருவகையான இரும்புக் கருவிகள் . மேல் உதட்டோடு மூக்கை அறுத்தெரிய உதவும் அவை. அறுத்தெரிந்த மூக்குகளை அள்ளிக்கொண்டு போய் கன்னட அரசினிடம் குவிப்பார்களாம் அவ்வீரர்கள். மீசையுடன் வந்த மேல் உதட்டு மூக்குகளுக்குச் சிறப்பான சன்மானமாம்.

சத்திய மங்கலத்திலும், மதுரை வரும் வழியிலும், மதுரையிலும் எண்ணற்ற ஆண் பெண் அப்பாவி சிசுக்களின் மூக்குகளை கன்னடிய வீரர்கள் அறுத்து எரிந்தார்களாம்.

இக்கட்டான இச்சூழ்நிலையில் அந்நாளில் மிக வலிமையுடன் இருந்த மன்னர் இராமநாதபுர திருமலை ரகுநாத சேதுபதி [ 1646 - 1676 ] அவரை அணுகுவதைத்தவிர வேறு வழியில்லை என உணர்ந்தார் திருமலை நாயக்கர்.

சேதுபதி 25 ஆயிரம் மறவர்களுடன் மதுரைக்கு விரைந்தார். நாயக்கர் படைகளுக்குத் தலைமையேற்றுக் கன்னடப்படைகளை அம்மைய நாயக்கனூரை அடுத்த பரந்த வெளியில் கன்னடியரின் பிரம்மாண்டமான படை அணிகளைத்தாக்கி அவர்களை முறியடித்து விரட்டியதோடு பின் தொடர்ந்து சென்று அவர்கள் கடைப்பித்த அதே மூக்கறுப்பு வேலையை மைசூரில் நம் மறவர்கள் செய்தார்களாம். மைசூர் மன்னன் கண்டீர நரசனைச் சிறைப்படுத்தி அவனுடைய மூக்கையும் மேல் உதட்டோடு அறுத்து பழிதீர்த்துக் கொண்டார்களாம்.

இச்செய்தியை அறிந்த நாயக்கர் மன்னன் மதுரைக்கோட்டை வாயிலில் சேதுபதி மன்னருக்குச் சிறப்பான வரவேற்பினை வழங்கிப் பரிசுப் பொருட்களையும் அளித்துப் பாராட்டினார். மேலும் சேது நாட்டின் தென்மேற்கே உள்ள
திருச்சுழியல், பள்ளி மடம், திருப்புவனம் ஆகிய தனது பகுதிகளை வெகுமதியாக வழங்கிச் சிறப்பித்தார்.
கன்னடியர் மூக்கறுப்பு வெற்றியின் நினைவாக மதுரைத் தமுக்கம் மைதானம் அருகே கல்மண்டபம் நாயக்கரால் கட்டப்பட்டது. வைகையாற்றில் அழகர் இறங்கிப் பின் திரும்பும் போது இம்மண்டபத்தில் அழகர் எழுந்தருளுவார். திருமலை ரகு நாதசேதுபதி திருப்பெயரை பறைசாற்றும் இவ்வுற்சவம் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

.

தகவல் நூல்கள்: சர்வோதயம் இதழ் ஆகஸ்ட் 2005
சேதுபதி மன்னர் வரலாறு முனைவர் எஸ் எம் கமால்
சிவகங்கைச் சீமை சுவாமி துர்காதாஸ் 1965

....